சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு பிரதமர் லோரன்ஸ் வோங் பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்றக் குழுவிடம் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரீதம் சிங் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்பதவிக்குத் தகுதியற்றவர் என பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவருக்கான கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் பாராளுமன்ற விவாதங்களில் முதலில் பதிலளிக்கும் முன்னுரிமை போன்ற சலுகைகளை அவர் இழக்கிறார்.
இருப்பினும், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலும், தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடர்ந்து நீடிப்பார்.
ரயீஸா கான் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியம் அளித்த விவகாரமே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக தொழிலாளர் கட்சியின் 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
