குடியை நிறுத்த மறுத்த தம் காதலனைக் கத்தியால் குத்திற்கொன்ற காதலி பற்றிய செய்தி இந்திய ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
தங்களுக்குள் மூண்ட சண்டையைத் தொடர்ந்து, தம் காதலனான தென்கொரிய ஆடவரை அவரது இந்தியக் காதலி குத்திக் கொலை செய்தார்.
இச்சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவிலுள்ள அவர்களது வீட்டில் நிகழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருபதுகளில் இருக்கும் அந்தப் பெண் வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்தவர் எனக் காவல்துறை தெரிவித்தது.
குடியை நிறுத்த அந்த ஆடவர் மறுத்ததால் அவர்களுக்குள் எழுந்த வாக்குவாதம் பின்னர் சண்டையாக மாறியது என்றும் அப்போது அப்பெண் அந்த ஆடவரைப் பலமுறை கத்தியால் குத்தினார் என்றும் காவல்துறை விளக்கியது.
பின்னர் தம்முடைய ஓட்டுநரை அழைத்த அப்பெண், அவரின் துணையோடு தம் காதலரை மருத்துவமனையில் சேர்த்தார். ஆயினும், அந்தத் தென்கொரியரைக் காப்பாற்ற முடியவில்லை.
மருத்துவமனையிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறை அப்பெண்ணைக் கைதுசெய்து காவலில் வைத்தது.
மது அருந்தியபின் தம் காதலர் வெறித்தனமாக நடந்துகொள்வது வழக்கம் என்றும் கிட்டத்தட்ட எல்லா நாளுமே அவர் தன்னை அடித்து உதைத்தார் என்றும் விசாரணையின்போது அப்பெண் காவல்துறையிடம் தெரிவித்தார்.
மேலும், சம்பவ நாளன்று நிகழ்ந்த வாக்குவாதத்தின்போது அவர் தம்மைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகவும் அப்பெண் கூறினார்.
அவரைக் கொல்ல வேண்டுமென்பது தமது நோக்கமில்லை என்றும் அப்பெண் சொன்னார்.
அவர்களது ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தின்படி, காதலர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் எழுந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. மாண்ட தென்கொரியர் கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஓர் அலுவலகத்தில் பணியாற்றிவந்தார்.
