கிறகரி வாவியில் மூழ்கிய சிறுவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
நுவரெலியா கிறகரி வாவியில் ஜெட்ஸ்கி (Jetski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, அப்படகு கவிழ்ந்ததால் நீரில் மூழ்கும் அபாயத்திற்குள்ளான இரு சிறுவர்களை கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இந்தப் படகு விபத்து நேற்று (16) இடம்பெற்றுள்ளது. படகு நின்றுவிட்டபோது கூக்குரலிட்டபோதும் அந்தப் படகை வழங்கியவர் உதவிக்கு வரவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் நீரில் வீழ்ந்ததும் காப்பாற்றப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிறகரி வாவியில் உயிர்க்காப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடற்படையின் விரைவுச் செயற்பாட்டு மீட்புக் குழுவின் வீரர்கள் இவ்விபத்தை அவதானித்துள்ளனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரு சிறுவர்களையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இரு சிறுவர்களும் 11வயது, 13 வயதுடைய மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படை மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.
