கல்வியியல் கல்லூரிகளில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி நூற்றுக் கணக்கான இளையோரிடம் இலட்சக் கணக்கான பணத்தைப் பெற்று மோசடி செய்த ஒரு வெள்ளாடு பற்றிப் பன்விலை பகுதியில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
பன்விலை கல்வி வலயத்திலுள்ள ஒரு பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகச் சேர்ந்த காலப் பகுதியில் இருந்தே இந்த வெள்ளாடு தனது கைங்கரியத்தைக் காட்டி வந்துள்ளது. அது பணியாற்றிய பாடசாலையின் அதிபரது பதவி முத்திரையையும் தனது மோசடிக்கு இந்த வெள்ளாடு பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
கல்வித் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு எனப் பல அரச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஒரு வலையமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ள இந்தப் போலி ஆசிரியர், வட்சப் மூலமாகக் குழுவை அமைத்து அதன் மூலம், கல்வியியற்கல்லூரிகளில் வாய்ப்பினைப் பெற்றுத் தருவதாகப் பிரசாரம் செய்திருக்கிறது.
கல்வியிற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத பலர் இந்தப் பொய்யனின் சொல்லை நம்பி அவனுக்குப் பல்லாயிரம், இலட்சம் எனப் பணத்தை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் போலி ஆசிரியரின் பின்னால் பலமுள்ள சில கரங்கள் ஒத்தாசையாக இருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவனது பசப்பு வார்த்தைகளை நம்பி, கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, ஹற்றன் முதலான பகுதிகளிலிருந்து நூற்றுக் கணக்கான இளையோர் இவர் சொன்ன வங்கிக் கணக்கிற்குப் பணம் வைப்பிலிட்டு ஏமாந்துள்ளனர்.
கல்வியியல் கல்லூரியில் நேர்முகத் தேர்வு ஒழுங்கு செய்திருப்பதாகச் சொல்லி குறிப்பிட்ட தினங்களில் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வருமாறு பணம் அனுப்பிய பலர் கேட்கப்பட்டுள்ளனர். அவர் சொன்னபடி போய்ப்பார்த்தால், அங்கு இவர்களது பெயர் இல்லை என்பதும் தாம் ஏமாந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
விடயம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதை அறிந்துகொண்ட இந்த ஏமாற்றுப் பேர்வழி சிலருக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்தியிருப்பதாகவும் தெரியவருகிறது. பணம் கொடுத்தவர்களைத் தொடர்புகொண்ட இவர், விடயத்தை வெளியில் சொன்னால், இலஞ்சம் கொடுத்து கல்லூரியில் சேர முயற்சித்ததாக உங்களை மாட்டிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் பற்றித் தற்போது கண்டி – பன்விலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இலஞ்ச விவகாரத்தில் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் பலர் விசயத்தை வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள்.
இவர் உருவாக்கிய வட்சப் குழுவில் சுமார் 200 பேர் வரை சேர்ந்திருக்கிறார்கள். அவ்வளவுபேரும் இந்தப் பேர்வழி சொன்ன வங்கிக் கணக்கிற்குப் பணம் போட்டுள்ளனர். இதில் இன்னொரு தகவல் என்னவென்றால், வெளிநாட்டுக்கு அனுப்புவதாகச் சொல்லிப் பலரிடம் பல இலட்சத்தைப் பெற்றிருப்பதாகவும் தெரியவருகிறது.
எனவே, கல்வியியல் கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு ஏற்பாடு செய்து தருவதாகச் சொல்லி எவராவது பணம் கோரினால், தயவுசெய்து கொடுக்க வேண்டாம் என்றும் பணம் கொடுத்து ஏமாந்த விடயம் பற்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட ஒருவர் மலைக்குருவி ஊடாகக் கேட்டுக்கொள்வதாகக் கூறினார்.
கண்டி பகுதியைப் பூர்வீகமாகக் கொள்ளாத இந்த நபர் முன்பு தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றிய பாடசாலையிலிருந்து ஈராண்டுகளுக்கு முன்னர் தாமாகவே விலகிக்கொண்டிருப்பதாகவும் தற்போது வேறொரு பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றுவதாகவும் மலைக்குருவிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
இவ்வாறான ஊழல், மோசடி செய்யும் ஒரு நபரைத் தொண்டர் ஆசிரியராக நியமிப்பதற்குக் கல்வித் திணைக்களம் அனுமதி வழங்குமா? அல்லது பல இலட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கும் இந்த நபர் பற்றி நடவடிக்கை எடுக்காமலிருப்பது ஏனென்பது புரியாத புதிராக உள்ளது.
எனவே, வட பகுதியிலிருந்து வந்து ஒண்டியாளாகப் பன்விலையில் இவ்வாறு ஆட்டையைப் போட்டுக்கொண்டிருக்கும் இந்த வெள்ளாடு பற்றிக் கல்வித் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என்பதை மலைக்குருவி அவதானித்துக்கொண்டிருக்கிறது.
