கபரகலையில் 50 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிக்கப்படுகின்றன.
மண்சரிவினால் வீடுகளை இழந்த கபரகலை தோட்டத்தின் 50 குடும்பங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி புதிய வீடுகள் கையளிக்கப்படுகின்றன.
ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட, பூனாகலை – கபரகலை தோட்டத்தில் கடந்த 2023 மார்ச் மாதம் ஏற்பட்ட மண்சரிவினால், 50 குடும்பங்கள் வீடுகளை இழந்தன.
அவர்கள் சுமார் 3 ஆண்டுகளுக்குமேலாக வசதிகளற்ற பழைய தொழிற்சாலையொன்றில் வசித்து வந்தனர். அவர்களுக்கு ‘நவோதயபுரம்’ வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடும் 10 பர்ச்சஸ் காணியில் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 550 சதுர அடி பரப்பளவில் வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் 32 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டைத் தவிர 175,000 ரூபாய் பெறுமதியான சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படுகின்றன.
