கண்டி, பன்விலைப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகப் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சத்துடனும் அவதானத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.
நெல்லிமலைப் பிரதேசத்தில் மாலை வேளைகளில் பெய்து வரும் கடும் மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே அப்பிரதேசத்தில் அமைந்திருந்த ஒரு பாலம் முற்றாக இடிந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு பாலமும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.


இரண்டு ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
பிரதேசத்தின் வீதியோரங்களில் அமைந்துள்ள மலைப்பகுதிகளிலிருந்து கற்கள் மற்றும் பாரிய பாறைகள் சரிந்து விழுவதுடன், பல இடங்களில் மண்மேடுகளும் சரிந்து விழுந்து வருகின்றன. இதனால், வீதிப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அச்சம் நிலவுகின்றது.
கடும் மழை மற்றும் மாலை வேளைகளில் நிலவும் அடர்ந்த மூடுபனி காரணமாக, வாகனங்களைச் செலுத்துவதிலும் சாரதிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, வாகன சாரதிகள் தமது வாகனங்களின் மஞ்சள் நிற எச்சரிக்கை விளக்குகளை ஒளிரச் செய்தவாறு, மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பன்விலைப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஏற்படக்கூடிய மண்சரிவுகள், பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் பாலங்கள் சேதமடைதல் போன்ற அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகப் பிரதேசத்தின் பல வீதிகள் சேறும் சகதியுமாகக் காணப்படுவதுடன், வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் பயணங்களை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, மலைப்பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் வீதிகளில் பயணிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
