நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் மீளெழுந்த ஓப்பநாயக்கா உணுவலை ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் இரண்டாவது தடவையாக எதிர்வரும் ஆடி மாதத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
சப்பிரகமுவை மாகாணத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இரத்தினபுரி மாவட்டத்தில் ஓப்பநாயக்கா உணுவலை கிராமத்தில் நூற்றாண்டுக்கும் மேலாக பக்த அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஆலம்பதி ஶ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலயத்தின் பூஜை வழிபாடுகள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டன.
கடந்த 1981ஆம் ஆண்டில் இடம்பெற்ற இனக் கலவரத்தால் கணிசமான தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்குத் தாயகம் திரும்பிச் சென்றனர். அதனால், ஆலயத்தின் அனைத்துப் பூஜை வழிபாடுகளும் கைவிடப்பட்டு ஆலய வளாகம் காடுமண்டிப்போனது.
இந்த நிலையில் சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு அன்னை காளி, பக்தர்களின் கனவில் தோன்றிக் கேட்டதற்கு அமைய பக்தர்கள் சிலர் ஆலய வளாகத்தில் சிறியதோரு கொட்டில் அமைத்து அம்மன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வேளையில் கடந்த வருடம் முதல் முறையாக ஆலம்பதி அன்னைக்குத் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஆலயம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
எமது அன்னை பக்த அடியார்களுக்கு பல முறை பல விதத்தில் காட்சியளித்திருப்பதும் அதிலும் குறிப்பாக இரவு வேளைகளில் ஒளிமயமான தீபமாக சஞ்சரிப்பதும் அகல் விளக்கு எண்ணெய் இல்லாமல் தன்னிச்சையாக அரை மணித்தியாலயத்திற்கும் மேலாக சுடர் விட்டு எரிந்ததும் ஆலய பூமியை வெள்ளை நிற நாகராஜன் பாதுகாத்து வருவதும் ஏனைய சமய வழிபாட்டு வணக்கஸ்தலம் அமைப்பதற்கு முயற்சி எடுத்தவர்கள் கண் காணாமல் சென்று விட்ட சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன.
எமது பிரதேசத்தில் சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவோர் அன்னையின் தீப சஞ்சாரத்தை இரவு வேளைகளில் கண்டு, தம்மைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்திருப்பதாக எண்ணித் தப்பி ஓடிச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இது மக்கள் மத்தியில் இன்றும் பேசு பொருளாக இருந்து வருகின்றது.
இவ்வாறான சக்திவாய்ந்த எமது அன்னைக்கு இரண்டாம் வருட ஆலய தேர்த் திருவிழா எதிர்வரும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் அன்று வெகு விமரிசையாக நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கண்ணபிரான் தியாகேஸ்வரன், உணுவலை, ஓப்பநாயக்கா


