ஏமன் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து புலம்பெயர்ந்தோர் 139 பேர் பலி! 116 பேரைக் காணவில்லை!
ஏமன் நாட்டிற்குச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் புலம்பெயர்ந்தோர் 139 பேர் பலியாகினர்.
ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியிலிருந்து ஏமன் நாட்டிற்கு 350 பேர் படகு மூலம் அனுமதியின்றி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அந்தப் படகு ஜிபூட்டியின் ஓபோக் நகருக்கு வடக்குப் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
படகு கடலில் மூழ்கியதில் 15 குழந்தைகள் உள்பட 139 பேர் பலியாகினர். சுமார் 116 பேரைக் காணவில்லை என சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “இது ஒரு பேரிழப்பு. உயிர் பிழைத்தவர்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த, உறவினர்கள் பற்றிய தகவல் ஏதுமின்றி காத்திருக்கும் குடும்பத்தினருக்கு நாங்கள் உடனிருக்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக அவசர உதவிகளை வழங்க ஜிபூட்டி அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு களத்தில் பணியாற்றி வருவகிறது.
பிழைப்புக்காக ஜிபூட்டி – ஏமன் இடையே உள்ள பாப்-எல்-மண்டேப் நீரிணையைக் கடந்து ஏமன் வழியே வளைகுடா நாடுகளை அடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் பலருக்கும் இந்த விபத்து மிகப்பெரிய துயரச் சம்பவமாக கடுமையான நினைவூட்டலாக அமைந்துள்ளது.
கடலில் மூழ்கியவர்களில் மீட்கப்பட்ட 109 உடல்களில் 52 ஆண்கள், 42 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் அடங்குவர் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
விபத்துக்குள்ளான படகிலிருந்து எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் நிலையில், 116 பேரைக் காணவில்லை.
கடந்த செப்டம்பர் 10 முதல், எத்தியோப்பியாவிலிருந்து ஜிபூட்டிக்கு 20,000-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்புத் தெரிவித்துள்ளது.
ஜிபூட்டி வழியாக ஏமனுக்கு கடல்வழியே செல்வது மிகவும் குறுகிய தொலைவு என்பதால் இந்தப் பாதையில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
2025-ஆம் ஆண்டில் மட்டும் இந்தப் பகுதியில் 900-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலியானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இந்தப் பாதை வழியே பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட கப்பல் விபத்து ஒன்றில் ஒன்பது பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் 45 பேரைக் காணவில்லை.
இந்த வழியே பயணம் மேற்கொள்வோரில் பெரும்பாலானோர் எத்தியோப்பியா அல்லது சோமாலியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பலர் ஜிபூட்டியில் சிக்கிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
