புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்தவிருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், திடீரென அதை இரத்துச் செய்துள்ளார்.
உரை நிகழ்த்த சில மணி நேரங்களே இருந்த நிலையில், அவர் மாநாட்டில் இருந்து வெளியேறினார்.
மாநாட்டு ஏற்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் தகவல்கள் தெரிவித்தன. குறிப்பாக, போக்குவரத்துக் குழப்பங்கள் காரணமாக ஏராளமானோர் டாக்சி சேவைகள் இல்லாமல் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான மஹுவா மொய்த்ரா, மோசமான நிர்வாகம் உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டார்.
என்விடியா நிறுவனத்தின் ஜென்சன் ஹுவாங் மாநாட்டில் பங்கேற்காத நிலையில், பில் கேட்ஸ் நிகழ்த்தவிருந்த முக்கியமான உரையும் ரத்தானது விவாதப்பொருளாகி உள்ளது.
‘ஏஐ’ உச்சநிலை மாநாட்டின் முக்கியமான முன்னுரிமைகளில் கவனம் செலுத்த பில் கேட்ஸ் திட்டமிட்டதால் மாநாட்டில் அவர் உரையாற்றமாட்டார் என கேட்ஸ் அறக்கட்டளை விளக்கம் அளித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு அம்சங்களைப் பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் சுகாதார, மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கான பணிகளை மேற்கொள்ள கேட்ஸ் அறக்கட்டளை முழு உறுதி பூண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உலகெங்கிலும் உள்ள பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்கும் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டெயினுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், விசாரணை அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வருகிறது.
