தமிழ் நாடு முன்னாள் முதல்வர் எம் ஜி இராமசந்திரனின் 38 ஆவது நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்படுகிறது.
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டி பிரதேசத்தில் 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி எம்.ஜி.ஆர் பிறந்தார்.
தமிழ்த் திரைப்பட நடிகராக அறிமுகமாகி தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர்.
மக்களுக்காக அரசியலில் களமிறங்கினார். சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தது.
தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988இல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது.
1987-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் திகதி இரவு ராமாவரம் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் உறங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு, நள்ளிரவு 12.30 அளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மயக்கமடைந்த எம்.ஜி.ஆருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சைபலன் அளிக்காத நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் எம்.ஜி.ஆர் உயிர் பிரிந்தது.
எம்.ஜி.ஆரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் 40-இற்கும் மேற்பட்டோர் தீக்குளித்தும் அதிர்ச்சியாலும் உயிரிழந்தனர்.
38 வது நினைவு தினமான இன்று இந்தியாவில் பல இடங்களில் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுவதோடு அரசியல்வாதிகளும் திரைதுறையினரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஈழ விடுதலைப்போராட்டத்தின் போது தமிழ் தரப்பிற்கு ஆதரவு அளித்தமையால் இவர் ஈழத்தமிழர்களால் இன்று வரை கொண்டாடப்படுகிறார்.
