கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு (05) செய்தியாளர்களிடம் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கப்பலின் இயந்திரம் ஒன்று செயல் இழந்ததாக சொல்லப்பட்ட ஈரானுக்குச் சொந்தமான அந்தக் கப்பலைக் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுவராமல் திருகோணமலைக்குக் கொண்டு செல்லத் தீர்மானிக்கப்பட்டது.
ஈரான் கப்பல் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் அதில் இருந்த 208 பணியாளர்கள் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள் .
நாங்கள் இறையாண்மையுள்ள ஒரு நாடு.எந்த நாட்டுக்கும் சார்பானவர்கள் அல்லர். எமது கடல் பிரதேசத்தில் இருந்து கோரப்பட்ட உதவியை இராஜதந்திர முறையில் கையாண்டோம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அனைவருடனும் நாங்கள் நட்புறவை பேணுகிறோம். நாங்கள் நடுநிலையான நாடாக மனித நேய அடிப்படையில் செயல்படுகிறோம்.
இந்தப் பிரச்சினையை முன்வைத்து அரசுக்கும் நாட்டுக்கும் எதிரான கருத்துகள் வந்தன. சிறுவர்கள் அந்தக் கப்பலில் இருப்பதாகத் தகவல் பரப்பப்பட்டது.
சிறுவர்கள் இருக்கிறார்கள் அரசு அவர்களைக் கவனிக்காமல் இருக்கிறாது என்றுதான் அவர்கள் செய்திகளைப் பரப்புகிறார்கள். இஃது அரசியல் நோக்கம் கொண்டது.
இது போர் ரீதியாக யாருக்கும் செய்யும் உதவி அல்ல. மனித உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் எடுத்த முடிவு. யாரும் இதனால் விசனப்படுவார்கள் என்று நினைக்க கூடாது.
சர்வதேச ஒப்பந்தங்கள் கொள்கைகள் அடிப்படையில் தான் நாங்கள் முடிவுகளை எடுத்தோம். இராஜதந்திர ரீதியில் பேச்சு நடத்தி இந்த முடிவை எடுத்தோம்.
இந்தக் கப்பலில் மீட்கப்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வெலிசர கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
திருகோணமலை செல்லும்போது அதன் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை. பணியாளர்கள் சிலருடன் கப்பல் அங்குச் செல்லும்.
சர்வதேச சாசனங்களைப் பின்பற்றி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஜனாதிபதி.
