இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் 2026 ஜனவரி 19 முதல் 29 வரை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
கொழும்பில் உள்ள, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று(17) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இ. தொ. கா பொதுச்செயலாளர்- பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் கலாநிதி ராம் பாபு உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சந்திப்பின்போது, ஹைதராபாத், ஆந்திரப் பிரதேசம், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற செயலமர்வுகள், ஆய்வுப் பயணங்களின் மூலம் உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், கற்றறிதல்கள், திறன் அபிவிருத்திகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், நான்கு உறுப்பினர்கள் பொதுவான விளக்க உரை வழங்கியதுடன், மேலும் நான்கு பேர் நேர்காணல் வடிவிலும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இவ்வாறான பயிற்சி வாய்ப்புகளை எதிர்காலத்திலும் இ.தொ.கா பிரதிநிதிகளுக்காக அதிகரிக்க இந்திய தரப்புடன் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் கலந்துரையாடின.
அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான “Overseas Citizenship of India” குடியுரிமை கடவுச்சீட்டினை, இந்திய வம்சாவளி மலையக மக்களும் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஜீவன் தொண்டமான் உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை வைத்ததற்கும், இந்திய தரப்பில் சாதகமான பதில் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மஸ்கெலியா நிருபர்.செ. தி. பெருமாள்

