இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ’ ஜா தெரிவித்தார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு நாள் வைபவத்தில் அவர் உரையாற்றினார்:
76 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்திலேயே இந்திய மக்கள் எமது அரசியலமைப்பை அங்கீகரித்தனர். அன்று முதல் நாம் பாரிய ஜனநாயக நாடாக வளர்ந்திருக்கும் அதேசமயம், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாகவும் உள்ளோம்.
இந்த வருடத்தின் குடியரசு தினத்தின் இரு தொனிப்பொருட்களாக வந்தே மாதரம் மற்றும் ஆத்ம நிர்பார் பாரத் ஆகியவை காணப்படுகின்றன.
வந்தே மாதரம் சுதந்திரத்தின் சிந்தனைகளை கொண்டாடுகின்றது. ஆத்ம நிர்பார் பாரத் சுபிட்சத்துக்கான எங்களின் அபிலாசைகளை முன்கொண்டு செல்கின்றது.
வந்தே மாதரம் இந்தியாவின் தேசிய பாடலாகும். இந்த பாடல் உருவாக்கப்பட்டமையின் 150 ஆண்டுகளை நாம் நினைவு கூர்கின்றோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போதான சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஒருமித்த கோஷமாக அது அமைகின்றது. இந்திய தாய் பற்றிய எமது பெருமிதத்தின் வெளிப்பாடாகவும் இது காணப்படுவதுடன் இன்று கூட ஓர் உத்வேகத்தின் காரணியாகவும் உள்ளது.
ஒரு தற்சார்பு இந்தியாவை கட்டி எழுப்புவதற்கான எங்களது எதிர்கால முயற்சிகளை குறிக்கும் ஒரு முன்னெடுப்பு ஆத்ம நிர்பார் பாரத் என்பதாகும்.
இது தனிமைப்படுத்தலை முக்கியத்துவப் படுத்தவில்லை பதிலாக துரிதமானதும் முழுமையான வளர்ச்சிக்கான ஓர் அபிலாசையாகும். உலகளாவிய ரீதியில் ஓர் நம்பத் தகுந்த பங்காளராவதற்கான திறன்களை உள்ளூரில் கட்டி எழுப்புவதையே இது குறித்து நிற்கின்றது.
2025 ஆம் ஆண்டில் இந்த இலக்கினை அடைவதற்காக, வரிகள் முதல் தொழில்துறை வரையிலும்; விண்வெளி முதல் பாதுகாப்பு மற்றும் அணு துறைகள் வரையிலும்; உட்கட்டமைப்பு முதல் உற்பத்தி துறை வரையிலும் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு முதல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் வரையிலும் நாங்கள் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
அது மட்டுமல்லாமல் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளில், இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்குரிய தேவைகளை குறைத்தல் போன்ற தொடர்ச்சியான முயற்சிகளும் உள்ளடங்குகின்றன.
ஸ்திரமான வளர்ச்சி, குறைவடைந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைவடைந்து வரும் பண வீக்கம் ஆகியவற்றுடன் இந்தியா மிகச்சிறந்த தருணத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்தியா நான்காவது பொருளாதார நாடாக வருவதில் எந்தவிதமான அதிசயமும் இல்லை. அத்துடன் இந்த தசாப்தத்தின் நிறைவுக்கு முன்னதாக மூன்றாவது பாரிய பொருளாதார நாடாக வருவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.
உலகளாவிய ரீதியில் நம்பகமான ஒரு பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட கடப்பாட்டுடன் இந்தியாவின் எழுச்சி இணைந்திருக்கின்றது.
உலகளாவிய ரீதியில் ஒரு நம்பகமான பங்காளராக வருவதற்கான பொறுப்புணர்வின் மேம்பட்ட உணர்வினையும் கொண்டிணைந்ததாக இந்திய எழுச்சி காணப்படுகின்றது.
விக்சித் பாரத் அல்லது வளர்ந்த இந்தியா என்ற இலக்கானது உலகுக்கான ஒரு நண்பன் அல்லது ஒரு விஸ்வ மித்ரா என்பவற்றுக்கான எங்களது நோக்குடன் ஒன்றிணைந்ததாகவே காணப்படுகின்றது.
எங்கள் அயலுறவுக் கொள்கைகளை எடுத்துக் கொள்ளும் போது மகாசாகர் மற்றும் அயலுறவுக்கு முதலிடம் ஆகிய கொள்கைகளில் இந்த அணுகுமுறையானது பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த வெளியுறவு கொள்கை நோக்கில் இலங்கைக்கு ஒரு விசேட இடம் உள்ளது. இந்த பிரிக்க முடியாத எங்களது பிணைப்பானது எங்களின் நாகரீக தொடர்புகள் மற்றும் புவியியல் ரீதியான அமைவிடம் ஆகியவற்றினால் மேலும் வலுவூட்டப்படுகின்றது.
நாம் இன்று நம்பிக்கை நல்லெண்ணம் மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அபரிமிதமான மட்டங்களை அனுபவிக்கின்றோம். இது வெறுமனே எமது தலைவர்கள் இடையில் மட்டுமல்ல எங்களது மக்களிடையிலும் அவை அனுபவிக்கப்படுகின்றமையை காண முடிகின்றது.
இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக
வளர்ந்துள்ளது.
2025 ஏப்ரலில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் மற்றும் அதற்கு முன்னதாக 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் ஆகியவை இந்த பங்குடமைக்கான இலட்சிய வழித்தடத்தை உருவாக்கியிருந்தன.
பௌதீக, டிஜிட்டல் மற்றும் சக்தி இணைப்புகள் எங்களது பங்குடமையின் முக்கிய காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அபிவிருத்திக்கான பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் பாதுகாப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு ஆகியவை முக்கிய இலக்குகளாக வளர்ந்துள்ளன.
இந்த பகிரப்பட்ட இலக்குகளை அடைவதற்காக கடந்த வருடம் நாம் மிகவும் கடுமையாக உழைத்துள்ளோம். மின் சக்தி வலையமைப்பு ஒருங்கிணைப்பு திட்டத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சம்பூர் சூரிய மின்சக்தி திட்டத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல திருகோணமலையை ஒரு எரிசக்தி கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பேச்சுகள் இந்தியா இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் இடையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பௌதிக உட்கட்டமைப்பினை நவீன மயப்படுத்துவதற்கு இந்தியா ஆதரவு வழங்கி வருகின்றது. மாஹோ – ஓமந்தை புகையிரத பாதையினை நவீன சமிக்ஞை முறைமையுடன் மேம்படுத்தும் திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த தசாபத்தத்திலும் அதற்கு அப்பாலும் கவனத்தில் கொள்ளும்போது 500 கிலோமீட்டர் ரயில் பாதையினை மீளமைப்பதற்கு அல்லது புனரமைப்பதற்கு இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. அத்துடன் 400 கிலோமீட்டர் ரயில் பாதைகளின் சமிக்கை தொகுதிகள் பொருத்தப்பட்டுள்ளன.
காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டம் வெகு விரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதேவேளை காங்கேசன்துறை நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை தற்போது கிரமமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கப்பல் சேவையினை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது மேற்கொண்டு வருகின்றோம். விமான சேவைகளை நோக்கும்போது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கிட்டத்தட்ட 180 வாராந்த விமான சேவைகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையிலான விமான சேவைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த வருடம் முதல் யாழ்ப்பாணத்துடனான இரண்டாவது பயண இடமாக திருச்சி இணைக்கப்பட்டது.
எமது பங்குடமையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் அமுல்படுத்தலுடன் இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணம் ஆரம்பமாக உள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் ஒட்டுமொத்த செயற்பாடுகளை டிஜிட்டல் முறைமையூடாக ஆரம்பிக்க உதவும். நாட்டில் ரொக்கப்பணமற்ற கொடுக்கல் வாங்கல் முறைமைகளை கட்டி எழுப்புவதற்கான இலங்கையின் அபிலாசையானது இலங்கையில் UPI கொடுப்பனவு முறைமை அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது.
எதிர்காலத்துக்கு தயாரான ஒரு பங்குடமையை உருவாக்குவதற்காக நாங்கள் பணியாற்றுகின்றோம். செயற்கை நுண்ணறிவு உட்பட தொழில்நுட்பத்தின் புதிய வடிவங்களுக்கான வாய்ப்புகளை கடந்த வருடத்தில் நாம் உருவாக்கி இருக்கின்றோம். எங்களது புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரு மூலதன நிறுவனங்கள் இலங்கையில் ஒரு நவீன புத்தாக்க கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
அது மட்டுமல்லாமல் எங்களது சிறந்த பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து செழிப்படைந்து வருகின்றது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருக்கும் நிலையில் சுற்றுலா துறைக்கான பாரிய ஆதாரமாக தொடர்ந்து இந்தியா உள்ளது.
அதேபோல கடந்த வருடம் இலங்கையின் ஏற்றுமதிக்கான இரண்டாவது பாரிய இடமாக இந்தியா பதிவாகியுள்ளது. இலங்கையின் பாரிய வர்த்தக பங்காளராகவும் நாம் தொடர்ந்து இருந்து வருகின்றோம். இந்திய முதலீடுகள் ஓர் அதிகரித்த செல்நெறியினை கொண்டிருக்கும் நிலையில் 2025 இல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில் கிட்டத்தட்ட ஐம்பது வீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும்.
- இந்திய உயர்ஸ்தானிகராலயம் கொழும்பு







