அரசாங்கத்தை விமர்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (31) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பிரசாரங்கள் தொடர்பாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அது குறித்த விசாரணைகள் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான உத்தியோகத்தர், எம்பிலிப்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுப் பணியாற்றியவராவார்.
