களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கயைின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக, களுகங்கையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புளத்சிங்கள , மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடா ஆறு, மகுர ஆறு மற்றும் அவற்றின் வெள்ள சமவெளியில் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அத்திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, குடா கங்கை மற்றும் மகுர கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகள் ஊடாக செல்லும் குறுக்கு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும், இந்த நிலைமை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பிரதேசங்கள் ஊடாக பயணிக்கும் வாகன ஓட்டுநர்களும் மிக விழிப்புடன் இருக்குமாறும் அத்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
