1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற நபர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் இன்று (31) ரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதியரசர்களான பிரியந்த பெர்னாண்டோ, சம்பத் அபேகோன் ஆகியோரின் உடன்பாட்டுடன், உச்ச நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தனவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, 2015ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்தக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து ‘ரிட்’ கட்டளை ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி தீர்ப்பொன்றை வழங்கி, ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து கட்டளை பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பிற்கு எதிராக சட்ட மாஅதிபரால் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு பிழையானது என உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று தனது தீர்ப்பை அறிவித்தது. சட்ட மாஅதிபரின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது என நீதியரசர்கள் குழாம் தீர்ப்பளித்தது.
