பரீட்சையின் கடைசி நாள் – ஒரு கல்விப் பயணத்தின் ஒரு கட்டமே தவிர, வாழ்க்கையின் முடிவு அல்ல.
ஆனால் அந்த நாளில் சில இடங்களில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் கண்டேன். அந்தக் காட்சிகள் மனதை உலுக்குகின்றன.
மாதக்கணக்கில் உழைத்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, அதிபரின் வழிகாட்டுதல், பெற்றோரின் நம்பிக்கை – இவை அனைத்திற்கும் முரணாக அமைந்த அசமந்த செயல்பாடுகள் கவலையளிக்கின்றன.
நேற்று முழுவதும் பள்ளிகளில் ஒழுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அன்பாகவும், கடுமையாகவும், பொறுப்புணர்வுடன் கூறப்பட்டன. அவ்வாறிருக்க, சிலர் எல்லையை மீறிச் செயல்பட்டிருக்கின்றனர்.
சில சிங்கள ஊடகங்கள் இதனை ‘மாணவப் பாதாளக் கோஷ்டியினர்’ என்று எல்லை தாண்டி விமர்சித்திருந்ததையும் அவதானித்தேன்.
இது ஒரு தனிப்பட்ட தவறு மட்டுமல்ல; சமூகச் சிந்தனையின் சீர்கேடு. பாடசாலைகள் ஒழுக்கத்தை விதைக்கும் புனித நிலங்கள். அங்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயலும் நிர்வாகங்களுக்கு இடையூறாக, “மனித உரிமை” என்ற பெயரில் தவறை நியாயப்படுத்தும் முயற்சிகள் வளர்ந்தால் அது பிள்ளைகளுக்கான பாதுகாப்பு அல்ல; அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் முன்னெடுப்பு.
பிள்ளைகளைக் காப்பது என்பது தவறை மறைப்பது அல்ல; தவறை திருத்தும் தைரியத்தை அளிப்பதே உண்மையான பாதுகாப்பு.
ஆனால் இதே சமூகத்தில் இன்னொரு முகமும் உள்ளது…
பரீட்சை முடிந்தவுடன் சில இளம் இதயங்கள் வேறு வழியைத் தேர்ந்தெடுத்தன. அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் காட்டவில்லை; மாறாக அவர்கள் பொறுப்பைக் காட்டினர். சமூகத்தினால் பாராட்டப்பட வேண்டிய முன்னுதாரணத்திற்கு அச்சாணியாக இருந்தனர் என்பதையும் காணக்கூடியதாக இருந்தது.
சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
பயன்தரும் மரக்கன்றுகளை நாட்டினர்.
தங்களை உருவாக்கிய கல்வி நிலையத்திற்கு நன்றி செலுத்தினர்.
தங்களை வழிநடத்திய ஆசிரியர்களிடம் ஆசிகள் பெற்று மரியாதையுடன் விடைபெற்றனர்.
இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல…
இது ஒழுக்கம் புத்தகத்தில் மட்டும் இல்லை என்பதை நிரூபிக்கும் செயல். இது நன்றியுணர்வு இன்னும் இளம் இதயங்களில் உயிருடன் இருப்பதற்கான சாட்சி.
இது “சுதந்திரம்” என்பதைக் குரலில் அல்ல, நடத்தையில் காட்டிய உதாரணம்.
ஒரு தலைமுறை தீய வலைகளில் சிக்கிச் சிதைகிறது என்று நாம் கவலைப்படுகிற வேளையில், அதே தலைமுறையிலேயே அமைதியாக சமூகத்திற்கு நம்பிக்கை விதைக்கும் அருமந்த மாணவச் செல்வங்களும் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
கல்வி என்பது அதிகூடிய புள்ளிகளைப் பெறுவதற்காக மட்டுமன்று, அது மனப்பக்குவம், நன்றியுணர்வு, தன்னடக்கம் என்பவற்றிற்கும் முன்னுதாரணமாக இருப்பதே.
இப்படிப்பட்ட செயல்கள் சிறியதாகத் தோன்றலாம்;
ஆனால் அவை நாளைய சமூகத்தின் அடித்தளக் கற்கள்.
இவர்களே எதிர்காலத்தின் ஒளி.
இவர்களே நம்பிக்கையின் விதைகள்.
