மஸ்கெலியா மருத்துவமனை குறை தீரக்க ஜனாதிபதி தலையிடவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஐம்பதாண்டுகள் பழைமைவாய்ந்த மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை! ஜனாதிபதி தலையிட்டுக் குறைகளைத் தீர்த்துவைக்க மக்கள் கோரிக்கை.
1961ஆம் ஆண்டு நாட்டின் நீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் மின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும் அப்போதைய அரசு மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மிகப் பெரிய நீர்த்தேக்கம் அமைக்க ஏற்பாடு செய்தது. அதுதான் மவுசாகலை நீர்த் தேக்கம்,
அதற்காக நீர் வளம் மிக்க பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன.ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவு கொண்ட, தேயிலைச் செடிகள்,தேயிலைத் தொழிற்சாலைகள், தொழிலாளர் குடியிருப்புகள், வணக்கஸ்தலங்கள், இரண்டு நகரங்கள் அடங்கலாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலை என்பன, இந்த நீர்த்தேக்கம் அமைப்பினால் நீரில் மூழ்கின.புதிதாக உருவாக்கப்பட்ட மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலை 1972 ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்க பட்டது.
அக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வைத்தியர்கள், மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர், பல் வைத்தியர் ஒருவர், ஆய்வு கூட உத்தியோகத்தர் ஒருவர், தாதியர்கள் 21 பேர், மேற்றன் ஒருவர், சிற்றூழியர்கள் 36 பேர், மருந்தகர் இருவர், குமாஸ்தா ஒருவர், நோயாளிகள் காவு வண்டி இரண்டு, சாரதிகள் மூவர், மேலதிக பராமரிப்பாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
மஸ்கெலியா பகுதியில் உள்ள அனைத்து நகர, கிராம, தோட்டபுற மக்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பெற்று வந்தனர். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக இவ்வைத்திய சாலையில் இயங்கி வந்த ஆய்வுகூடம் இல்லாமல் ஆக்கப்பட்டது. மாடிகளுக்குச் செல்லும் மின்தூக்கி இரண்டும் செயல் இழந்து காணப்படுகின்றன.மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் உள்ளது. நோயாளர் காவு வண்டி இரண்டும் ஏனைய பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
தற்போது மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர், வைத்திய அதிகாரிகள் நால்வர் உள்ளனர். தாதிகள் 7 பேர், குமாஸ்தா ஒருவர், சிற்றூழியர்கள் 15 பேர், நோயாளி காவு வண்டி ஒன்று, சாரதி ஒருவர், மருந்தகர் ஒருவர் உள்ளனர்.
கடந்த காலங்களைப்போன்று எல்லா சேவைகளையும் இப் பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் எனப் பல முறை போராட்டம் செய்தும் பலன் இல்லை.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், செயல் இழந்து காணப்பட்ட, மின்தூக்கியைப் பழுதுபார்க்க உதவினார். குறுகிய காலத்தில் மீண்டும் அது பழுதானது.
இந்த அரசு வந்த பிறகு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி வந்து பார்வையிட்டுச் சென்றார். இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றார்.
எப்போது விடிவு பிறக்கும் என்று தெரியவில்லை. இதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்வர வேண்டும். அவர் நேரடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் நீக்கி, இந்த வைத்திய சாலையைத் தரமுயரத்த வேண்டும் என மஸ்கெலியா பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
