இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மறே மற்றும் கியூ தோட்ட மக்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 110 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக கடந்த 08ம் திகதி முதல் அங்கிருந்து வெளியேறி நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் தற்காலிகமாக தங்கிவருகின்றனர்.
அதேவேலை, கியூ மேற்பிரிவு தோட்டத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக 122 குடும்பங்களை சேர்ந்த 310 குடும்ப உறுப்பினர்களும் தற்காலிகமாக கடந்த 08ம் திகதி முதல் அங்கிருந்து வெளியேறி சென்.ஜோன் டிலரி தமிழ் வித்தியாலய பாடசாலையிலும் கியூ கீழ் பிரிவு ஆரம்பப் பிரிவு பாடசாலை கட்டிடத் தொகுதியில் தற்காலிகமாக தங்கிவருகின்றனர்.
மேலும் தற்காலிகமாக வெளியேறி பாடசாலைகளில் தங்கி வருகின்ற மறே, கிவ் தோட்ட மக்களை நேரில் சென்று நேற்று (09) பார்வையிட்டு நிவாரணம் வழங்கியதாக இதொகா பொதுச் செயலாளர் ஜீவின் தொண்டமான் எம்பி தெரிவித்துள்ளார்.
இதன்போது, ‘மறே மற்றும் கியூ தோட்ட மக்களின்’ அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அனைவருக்கும் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலை உடைமைகளை இழந்த மாணவர்களுக்கான அப்பியாச புத்தகங்கள் என்பன வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொன்டுள்ளேன்.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.கா வின் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் கோவிந்தன் சென்பகவள்ளி, நோர்வூட் பிரதேச சபை முன்னாள் தலைவர் ரவி குழந்தைவேல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலய உத்தியோகத்தர்கள், இ.தொ.கா உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டனர்.
மேலும், கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாடானது மலையக பிரதேச பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் நாட்களுக்குள் முழுமையாக வழங்கி வைக்கப்படவுள்ளதோடு, உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாக ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
செ.தி.பெருமாள் மஸ்கெலியா நிருபர்

