பின்னோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வட்டவளை பின்னோயா தோட்டத்தில் இன்று மதியம் (19) தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டு இருந்த வேளையில், பெண்கள் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்.
அப்பகுதியில் உள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூடு கலைந்து அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களைக் கொட்டியுள்ளது. இதில் ஐவர் வட்டவளை பிராந்திய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், “அடிக்கடி இவ்வாறான நிலை ஏற்பட்டு வருகிறது. எமது தோட்டப் பகுதியில் குளவிக் கூடுகள், சிறுத்தைகள், நச்சுப் பாம்பாகள் அதிமாக உள்ளன.நாங்கள் காலையில் பணிக்குச் சென்று, மாலை வீடு திரும்பினால் மட்டுமே எமது பிள்ளைகள், கணவர் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். இவ்வாறு விஷ ஜந்துக்களால் உயிர் ஆபத்து உள்ளது” எனத் தெரிவித்தார்கள்.
இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸ் விசாரணை நடத்தி வருகின்றது.
மஸ்கெலியா நிருபர்
