பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் பாராளுமன்றம் இன்றும் நாளையம் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.
இன்று டிசம்பர் 18ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு அன்றையதினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் பி.ப 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.டிசம்பர் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.
