பாடகி லதா வல்பொலவின் இறுதிக் கிரியை பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த சிங்களத் திரையிசையின் ‘குயில் என அறியப்படும் லதா வல்பொல வயது மூப்பின் காரணாக சுகவீனமுற்றிருந்த நிலையில் தனது 91ஆவது வயதில் நேற்று காலமானார்.
அன்னாரது உடல் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிவரை கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.
பின்னர் சுதந்திர சதுக்க வளாகத்தில் அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர், பொரளை பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1934 ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 ஆம் ஆண்டு தனது 12 ஆவது வயதில் அன்றைய ‘ரேடியோ சிலோன்’ வானொலியில் தமது முதல் பாடலைப் பாடினார்.
அவர் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் வெளிநாட்டு மொழிப் பாடல்களும் அடங்குகின்றன.
1953 ஆம் ஆண்டு ‘எதா ரே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், கடந்த பல தசாப்தங்களாக 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் தமது குரலால் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
