நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/கிளைன்லைன் தமிழ் வித்தியாலயத்தின் மாணவி மிதுர்ஷா, 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தனது குடும்பத்திற்கும், பாடசாலைக்கும், முழுப் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பிராபாகரன் பிரதீபா அவர்களின் செல்ல மகளான மிதுர்ஷாவின் இந்த வெற்றி சாதாரணமானதல்ல. பல வசதிகள் நிறைந்த சூழலில் அல்லாது, கல்விக்காக பல சவால்களை எதிர்கொண்டு அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். மிகவும் பின்தங்கிய கிராமப்புறப் பகுதியில் வாழும் இவர், தினமும் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடசாலைக்கு எந்தவித போக்குவரத்து வசதியும் இன்றி நடைபயணமாகச் சென்று தனது கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்து வந்துள்ளார்.

கல்வியே பிள்ளைகளின் அழியாத சொத்து என்ற உயர்ந்த எண்ணத்துடன் அவரது பெற்றோர் அவருக்கு உறுதுணையாக நின்றனர். பொருளாதார மற்றும் சமூக சவால்கள் இருந்தபோதிலும், தமது மகளின் கல்விப் பயணத்தில் அவர்கள் வழங்கிய ஆதரவும் ஊக்கமும் இந்த வெற்றியின் முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.
அதேபோல், கிளைன்லைன் தமிழ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. மேலதிக வகுப்புகள், தொடர்ச்சியான வழிகாட்டல்கள், பாடவாரியான பின்னூட்டங்கள், மாணவர்களின் திறன்களை அடையாளம் கண்டு மேம்படுத்தும் கற்றல் செயற்பாடுகள் ஆகியவற்றின் மூலம் மாணவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன் விளைவாகவே இன்று மிதுர்ஷா போன்ற மாணவர்கள் கல்விச் சாதனைகளின் உச்சியை எட்டியுள்ளனர்.
மிதுர்ஷாவின் இந்த வெற்றி தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; அது கல்வியின் சக்தியை எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். கடின உழைப்பு, விடாமுயற்சி, பெற்றோரின் ஆதரவு மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு இணைந்தால் எந்த தடைகளையும் வென்று வெற்றியை அடைய முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இந்த மகத்தான சாதனையைப் பெற்ற மிதுர்ஷாவிற்கு எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். அவரது கல்விப் பயணம் மேலும் உயரங்களை எட்டி, எதிர்காலத்தில் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த சேவையாற்றும் உயர்ந்த நபராக விளங்க இறைவனை வேண்டுகின்றோம்.
“கல்வி தான் அழியாத சொத்து; முயற்சி தான் வெற்றியின் திறவுகோல்” என்பதற்கு மிதுர்ஷாவின் சாதனை ஒரு வாழும் சான்றாகும்.
கௌசல்யா

