நுவரெலியா மாவட்ட சிறந்த பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
நுவரெலியா மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள், மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் பதிநாயக்கா தலைமையில் கௌரவிக்கப்பட்டனர்.
நேற்று (06) பிற்பகல் 3.00 மணியளவில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் ஆச்சர்ய மாநாட்டு மண்டபத்தில் கௌரவிப்பு விழா நடைபெற்றது.
நுவரெலியா பொலிஸ் பிரிவை உள்ளடக்கிய வகையில், நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தமது கடமைகளை நிறைவேற்றும் போது சிறந்த செயல்திறன், அர்ப்பணிப்பு, தொழில்முறைப் பண்புகளை வெளிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் பாராட்டப்பட்டனர்.


நிகழ்வில் உரையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பதிநாயக்க:
பொலிஸ் சேவையின் தரத்தை உயர்த்துவதில் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் பொதுமக்களுக்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கான பற்றுறுதி ஆகியவற்றைப் பாராட்டினார்.
இத்தகைய சேவைகளை கௌரவிப்பதன் மூலம் தொழில்முறை ஊக்கமும் பொதுமக்களின் நம்பிக்கையும் மேலும் வலுப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான துஷாரி தென்னகோன், நுவரெலியா பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ. ஜி. ஜே. சந்திரகுமார, நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. எம். சமரகோன் பண்டா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க உள்ளிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், நுவரெலியா தலைமையக பிரதம பொலிஸ் பரிசோதகர் சாமிந்த சஞ்சீவ, நுவரெலியா மாநகர ஆணையாளர் விஜேகோன் பண்டார, வலயக் கல்விப் பணிப்பாளர் டி. எம். எஸ். திசாநாயக்க உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களின் உயர் நிர்வாக அதிகாரிகள், நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள், பொலிஸ் குழுத் தலைவர்கள்,பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமது கடமைகளை நிறைவேற்றும் போது சிறந்த செயல்திறனையும் அர்ப்பணிப்புமிக்க சேவையையும் வெளிப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து பிரதம பொலிஸ் பரிசோதகர் பதவி வரைச் சேர்ந்த 22 பொலிஸ் அதிகாரிகளுக்குப் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்பரிசுகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பதிநாயக்க அவர்களினாலும், அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்களினாலும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளினாலும் வழங்கப்பட்டன.
நுவரெலியா ஆர். எப். எம். சுஹைல்
