சபரகமுவை மருத்துவப்பீட வளாகம் இன்று ஜூலை 4 ஆம் திகதி பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்படுகிறது.
மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி மூத்த பேராசிரியர் நிர்மலி விக்கிரமரட்ண இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சபரகமுவை மாகாண ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரட்ண,சவுதி அபிவிருத்தி நிதியத்தின் துணைத் தலைவர் பொறியியலாளர் பைசால் எம். அல்காத்தனி உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்களும் பங்கேற்கின்றனர்..
இலங்கை அரசும் சவுதி அரேபிய அரசும் இணைந்து நிதியுதவி வழங்கி நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடம், இரத்தினபுரி புதிய நகரப் பகுதியில் 21 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்காக 162 புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், தற்போது மொத்தமாக சுமார் 750 மருத்துவ மாணவர்கள் இப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றனர்.
இத்திட்டத்திற்காக இலங்கை அரசு ரூ. 2,366 மில்லியன் நிதியையும், சவுதி அரேபியா அமெரிக்க டொலர் 50 மில்லியன் நிதியையும் வழங்கியுள்ளது.
இதையும் வாசியுங்கள்: இரத்தினபுரி மாவட்ட செய்தியாளர்கள் நலனுக்காக ‘எசிதிசி’ கருத்தரங்கு
புதிதாகக் கட்டப்பட்ட சபரகமுவை மருத்துவப்பீட வளாகம் ஒரே நேரத்தில் 500 மாணவர்கள் தங்கக்கூடிய விடுதி, 1,060 பேர் அமரக்கூடிய பிரதான அரங்கம், தலா 250 இருக்கைகள் கொண்ட இரண்டு விரிவுரைக் கூடங்கள், 200 இருக்கைகள் கொண்ட ஒரு விரிவுரைக் கூடம்,160 இருக்கைகள் கொண்ட மூன்று விரிவுரைக் கூடங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பணியாளர்களுக்கான தங்குமிடங்கள், உணவகம்,பிற நவீன வசதிகளும் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை வளாகத்தில் மருத்துவப் பீடத்திற்காக ஒன்பது மாடிகளைக் கொண்ட நவீன பேராசிரியர் மருத்துவப் பிரிவும் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இதில் 460 நோயாளர் படுக்கைகள், முழுமையான ஆய்வகங்கள், விஞ்ஞான ஆய்வு வசதிகள்,பல்வேறு மருத்துவ வசதிகள் இடம்பெறுகின்றன.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மூத்த பேராசிரியர் நிர்மலி விக்கிரமரட்ண, 2005ஆம் ஆண்டிலேயே சபரகமுவை பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தித் திட்டத்தில் மருத்துவ பீடம் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு அரசின் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் மருத்துவ பீடம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
அதே ஆண்டில் 72 மாணவர்களுடன் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் குருவிட்டையிலுள்ள அரசின் கணக்காய்வுத் திணைக்களக் கட்டடத் தொகுதியில் கல்வி நடவடிக்கைகள் நடைபெற்றன.
பின்னர் இரத்தினபுரி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கட்டடத்திலும் சபரகமுவை மாகாண சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலும் விரிவுரைகள் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
