கொழும்பு காலி முகத்திடலில் கின்னஸ் உலக சாதனை படைத்த ‘சங்கமம் 2026’
10,000 சலங்கைகளின் ஒரே தாளம் – 5000 பரத கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை* வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்தியாவில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும் அவரின் வழிகாட்டல், ஆலோசனையின் பேரில், இந்தியாவின் சங்கமம் குளோபல் எகடமி, இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலி டேஸ் ஏற்பாட்டில் இன்று(14/06) கொழும்பு காலி முகத்திடல் வரலாற்றுச் சாதனையைக் கண்டது.
‘சங்கமம் 2026’ எனும் பெயரில் நடைபெற்ற இப்பெருவிழாவில் 5000 பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு, 10,000 கால் சலங்கைகளை ஒரே தாளத்தில் ஒலிக்கச் செய்து உலக சாதனை படைத்தனர்.
இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள்,வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் குழுமியிருந்தனர்.
‘சங்கமம் 2026’உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை உறுதி செய்து பிரதி அமைச்சரின் கரங்களுக்கு கின்னஸ்
உலக சாதனை நிறுவனத்தின் மூலம் சான்றிதழ் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை இலங்கையில் நிகழ்த்துவதற்கு வழி வகுத்த பிரதியமைச்சருக்கு வருகை தந்திருந்த பெற்றோரும் மாணவர்களும் நன்றி தெரிவித்ததுடன் இவ்வாறான கலாசார நிகழ்வுகளுக்கு மென்மேலும் முக்கியத்துவம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கடத்தொழில், நீர்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திர சேகர் , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ ஜா,தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உள்பட பல விசேட அதிதிகளும் கலந்து கொண்டனர்.







