தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது.
அந்த 23ஆம் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல்ரஹ்மான் ஜசிம் அல் தானி, அமெரிக்க ஆதரவோடு நடத்தப்படும் காஸா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியக் கட்டத்தில் உள்ளன என்றார். ஆயினும் போர்நிறுத்த உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் சமரசம் செய்யும் முக்கிய நாடாக உள்ள கத்தார், அதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல முயன்றுவருவதாக பிரதமர் கூறினார்.
“நாங்கள் முக்கிய கட்டத்தில் உள்ளோம். தற்போதைய நிலை மிகவும் குறுகிய போர்நிறுத்தம் மட்டுமே,” என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடப்பில் இருக்கும் இருதரப்பு அமைதியை மேற்கோள் காட்டினார்.
“தற்போதுள்ள அமைதி, போர்நிறுத்தமாகாது. அனைத்து இஸ்ரேலியப் படைகளும் முழுமையாக காஸாவைவிட்டு வெளியேறி, மக்கள் அங்கு வழக்கமாக நடமாடும் நிலை ஏற்பட்டால்தான் அது சாத்தியமாகும். இன்றைய நிலை அப்படி இல்லை,” என்றார் திரு ஷேக் முஹம்மது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின்படி, இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் நடக்கும் போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
