கோப்புப் படம்
கண்டி தனியார் பஸ்ஸில் ஆசிரியை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி தனியார் பஸ்ஸில் தமிழ் ஆசிரியை ஒருவருக்கு இம்சை செய்து வந்த நபர் இன்று (27) அவரை அவரது பாடசாலை நிறுத்தத்தில் இறங்கவிடாது தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த ஆசிரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மலையகத்தின் இதயமாகக் கருதப்படும் பகுதியில் இருந்து கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ்ப் பாடசாலையொன்றுக்குப் பணிக்கு வரும் ஆசிரியை ஒருவருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் பஸ்ஸில் ஆசிரியை பயணிக்கும்போதெல்லாம், இந்த இம்சை அரசன் கடந்த சில நாள்களாகவே அவருக்குத் தொந்தரவு கொடுத்து அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அச்சமடைந்த ஆசிரியை, கடந்த சில நாள்களாக வேறு பஸ்களில் பணிக்குச் சென்று வந்துள்ளார்.
இன்று (27) பணிக்குச் செல்ல தாமதமானதால், எல்ல பகுதியிலிருந்து கண்டி நோக்கிப் பயணிக்கும் அதே இம்சை பஸ்ஸில் ஏற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வழமைபோலவே அந்த ‘மாடனும்’ பஸ்ஸில் ஆசிரியைக்குத் தொந்தரவு கொடுத்துள்ளான்.
தனது பாடசாலை பஸ் நிறுத்தம் வந்ததும், ஆசிரியை இறங்க முற்பட்டுள்ளார். எனினும், அந்தக் கொடூர நபர் ஆசிரியையை இறங்கவிடாமல் தடுத்துத் தடங்கல் ஏற்படுத்தியுள்ளார். இதனால் பொறுமையிழந்த ஆசிரியை அதைத் தட்டிக்கேட்கவே, அந்நபர் ஆசிரியை மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ஆசிரியை உடனடியாகக் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு இவ்வாறு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரிய சங்கங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கௌசல்யா
