இலண்டனிலிருந்து மும்பாய் வரவிருந்த ஏர்இந்தியா 787 ரக விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை கண்டறிந்த விமானியால் அனர்ததம் தவிர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலண்டன் ஹீத்று விமான நிலையத்திலிருந்து திங்கள் இரவு 9.05இற்கு மும்பாய் புறப்படவிருந்த விமானத்தை இயக்குவதற்கு முன்னர் இரு விமானிகளில் ஒருவர் எரிபொருள் சுவிட்சை (ஆளியை) சோதித்தபோது அது RUN நிலையில் நிற்காமல் CUT OFF நிலைக்கு நழுவியுள்ளது.
இரண்டு முறை அவ்வாறு நழுவிய சுவிட்ச் மூன்றாவது முறையே சரியாகியுள்ளது. அதன் பின்னர் இரவு 9.40 இற்கு இந்த ஏஐ132 விமானம் மும்பாய் வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரைநிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஜூன் 12 ஆம் திகதி அஹமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த விபத்துக்குக் காரணம் எரிபொருள் சுவிட்ச் கட் ஓப் நிலைக்குச் சென்றமை என்று கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஏர் இந்தியா 787 விமானத்தின் எரிபொருள் சுவிட்ச் தன்னியக்கமாகச் செயல்படாது என்றும் அதனை கட் ஓப் நிலைக்குக் கொண்டு செல்ல ஒருவர் இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனால், விமானிகளில் ஒருவர்தான் சுவிட்சின் நிலையை மாற்றியிருக்க வேண்டும் என்றும் ஊகிக்கப்பட்டது.
எனினும், இலண்டனில் ஏற்பட்டுள்ள சம்பவத்தில் எரிபொருள் சுவிட்ச் கட் ஓப் நிலைக்குத் தானாக நழுவிச்சென்றதை விமானி அறிந்து விசனத்துடன் முறைப்பாடு செய்துள்ளார்.
விமானியின் கரிசனையைக் கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்திருப்பதாக இந்தியா ருடெ செய்தி தெரிவிக்கின்றது.
