பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளஸ்தாபிக்கும் கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (20) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் கிரேகரி பைன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க இந்தச் சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) கீதா ஹேரத் பொருளாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். விளையாட்டு, சுற்றுலா, வர்த்தகம், தொழிலாளர் மற்றும் கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இங்குகலந்துரையாடப்பட்டது.
