நாட்டின் பல பகுதிகளிலும் இன்புளுவென்சா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட மருத்துவ நிபுணர் டொக்டர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்று காணப்பட்டால், இரண்டு அல்லது மூன்று நாள் ஓய்வாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக இன்புளுவென்சா தொற்று அதிகரித்து வருவதை நோய்க் கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக அவதானிக்க முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 20 வைத்தியசாலைகளிலிருந்து பெறப்பட்ட கண்காணிப்புத் தரவுகள்,மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) பரிசோதனைகளுக்காகப் பெறப்பட்ட மாதிரிகளில் சுமார் 35 சதவீதமானவை இன்புளுவென்சா தொற்றுக்குரியவை எனப் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பொதுமக்கள் இது தொடர்பில் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
நோய் அறிகுறிகள்
காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, தலைவலி மற்றும் உடல் வலி ஆகியன இன்புளுவென்சா தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும்.
அத்துடன், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதுடன், இவ்வாறான அறிகுறிகள் பெரியவர்களைவிட சிறுவர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றன.
இன்புளுவென்சா தொற்றுக்குள்ளாகும் அனைவருக்கும் காய்ச்சல் ஏற்படுவதில்லை என்பதுடன், சிலருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் வெளிப்படாமல் இருக்கலாம்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முறையான சிகிச்சை மற்றும் ஓய்வின் மூலம் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் நோயின் தீவிரம் குறையக்கூடும் என வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்துள்ளார்.
நோய் பரவும் விதம்
இன்புளுவென்சா வைரஸ் பிரதானமாக, தொற்றுக்குள்ளானவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் அல்லது பேசும்போதும் வெளியேறும் சுவாசத் துளிகள் மூலம் பரவுகிறது.
அத்துடன், வைரஸ் படிந்த மேற்பரப்புகள் அல்லது பொருட்களைத் தொட்ட பின்னர் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதன் மூலமும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரும், அறிகுறிகள் காணப்படும் காலப்பகுதியிலும் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவக்கூடும்.
பொதுவாக, தொற்றுக்குள்ளானவர்களிடமிருந்து முதல் மூன்று நாட்களில் வைரஸ் அதிகளவில் பரவுகிறது. ஆரோக்கியமான பெரியவர்கள் அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரிலிருந்து நோய் ஏற்பட்ட பின்னர் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை மற்றவர்களுக்குத் தொற்றைப் பரப்பக்கூடும்.
வைரஸ் தொற்றுக்குள்ளான பின்னர் அறிகுறிகள் வெளிப்படுவதற்கு பொதுவாக இரண்டு நாட்கள் தேவைப்படுவதுடன், சிலருக்கு ஒன்று முதல் நான்கு நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றலாம்.
அதிக ஆபத்துள்ளவர்கள்
கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்புளுவென்சா தொற்றினால் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ளும் அபாயம் அதிகமாகக் காணப்படுகிறது.
குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் உடல் நிறைச் சுட்டெண் 40 அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் அதிக ஆபத்துள்ள குழுவினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான ஆபத்துக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் சென்று அல்லது தகுதியான மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்
பாடசாலை மாணவர்கள் அல்லது தொழிலுக்குச் செல்பவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்டால், இரண்டு முதல் மூன்று நாட்கள் வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுப்பது நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும்.
மேலும், சவர்க்காரம் பயன்படுத்தி கைகளைக் கழுவுதல், நோய் அறிகுறிகள் காணப்படும் காலத்தில் முகக்கவசம் அணிதல், நோயாளிகளிடமிருந்து தகுந்த இடைவெளியைப் பேணுதல் மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் வாய், மூக்கை மூடிக்கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்துடன், காற்றோட்டமான சூழலைப் பேணுவதும் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும்.
தொற்றுக்குள்ளானவர்கள் செய்ய வேண்டியவை
இன்புளுவென்சா தொற்றுக்குள்ளானவர்கள் போதுமான அளவு நீர் அருந்துவதுடன், வீட்டில் தங்கியிருந்து ஓய்வெடுக்க வேண்டும்.
காய்ச்சல் காணப்படும் சந்தர்ப்பங்களில் மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய பரசிட்டமோல் மருந்தைப் பயன்படுத்தலாம்.
இருமல் தீவிரமடைந்தாலோ அல்லது நோய் அறிகுறிகள் மோசமடைந்தாலோ உடனடியாக மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
