இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான இந்திய கடற்படையின்
முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியக் கடற்படைக்கு சொந்தமான பாய்மர
பயிற்சிக் கப்பலான ஐ,என்,எஸ் தரங்கினி 2026 பெப்ரவரி 27 முதல் மார்ச் 02
ஆம் திகதி வரை திருகோணமலைக்கும், அதன் பின்னர் 2026 மார்ச் 06-09
வரை கொழும்புக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை கடற்படையைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுக்கு துறைமுக மட்ட மற்றும்
கடல் மட்ட பயிற்சிகள், கப்பலோட்டல் பயிற்சி மற்றும் அனுபவ பகிர்வுகள்
உள்ளிட்டவற்றை இலக்காகக்கொண்டு இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாகபட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மீளாய்வு 2026 இல்
பங்கேற்ற நிலையில் அதன் நிறைவில் இவ்விஜயம் மேற்கொள்ளப்படுவதுடன் கமாண்டர் நிதின் கஜ்ஜார் அவர்களது கட்டளையின் கீழ் குறித்த கப்பல் வழிநடத்தப்படுகின்றது.
இயந்திரங்கள் மற்றும் எரிவாயு மூலம் இயக்கப்படும் கப்பல்கள் நிறைந்த இந்த நவீன யுகத்தில் பாய்மரப் பயிற்சி கப்பல்களை இயக்கும் உலகின் சில கடற்படைகளில் இந்திய கடற்படையும் ஒன்றாக உள்ளது.
ஐஎன்எஸ் தரங்கினி உலகப் புகழ்பெற்ற கப்பல் வடிவமைப்பாளரான கொலின் மூடி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பல் கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் உள்நாட்டிலேயே கட்டப்பட்டதாகும். இரும்பினாலன கப்பல் வெளிப்பாகம், அலுமினிய அடுக்குகள் மற்றும் தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டதும் நெகிழ்திறன் கொண்டதுமான கப்பல் மேற்பகுதியையும்
இக்கப்பல் கொண்டுள்ளது. இக்கப்பலின் நீளம் 54 மீற்றர், எடை 500 தொன்களையும் கொண்டிருக்கும் நிலையில் 10,000 சதுர அடிக்கு மேல் மொத்த பாய்மரப் பரப்பளவையும் 20 பாய்மரங்கள் மற்றும் 200 கயிறுகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் நிலையில் அவற்றின் மொத்த நீளம் 20 கிலோ மீற்றராகும்.
