அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 113ஆவது ஜனன நாள் இன்று அனுட்டிக்கப்படுகிறது.
மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் ன் 113ஆவது ஜனன நாள் இன்றாகும் (ஓகஸ்ட் 30)
1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பிறந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்,இலங்கை மலையகம் வாழ் தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களுக்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்த தேசியத் தலைவராவார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அவர், இலங்கை – இந்திய காங்கிரஸின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றினார்.
அதன் தலைவராகவும் செயற்பட்ட அவர், பின்னர் இலங்கை – இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றம் பெற்றதன் பின்னரும் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, மலையகம் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் அரசாங்கத்தில் பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்ததுடன், இலங்கையின் தேசிய அரசியலில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார்.
மலையக மக்களின் அடிப்படை உரிமைகள், தொழிலாளர் நலன், கல்வி, வீடமைப்பு மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய சேவைகள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன.
அவரது அரசியல் பயணம் மற்றும் மக்கள் சேவையை நினைவுகூரும் இந்நாளில், மலையக மக்களின் உரிமைகளுக்காக அவர் முன்னெடுத்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
ஊடகப் பிரிவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
