மலையகத்தின் மூத்த பொதுச் சுகாதார பரிசோதகர் பீ.ஏ.பாஸ்கரன் 33 வருட சேவையின் பின் இன்று தனது 60 ஆவது பிறந்த தினத்தில் (09.10.2026) ஓய்வு பெறுகிறார்.
கண்டியைப் பிறப்பிடமாக கொண்ட இவர், கண்டி கலஹா இராமகிருஷ்ண கல்லூரி, மஸ்கெலியா சென் ஜோசப் கல்லூரி, ஹற்றன் ஹைலண்ட்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக சேவையின் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார்.
1990 ஆம் ஆண்டில் ஜனசவிய நியமனத்தின் கீழ் மஸ்கெலியா மொட்டிங்கின் வித்தியாலயத்தில் 03 வருடம் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
அக்காலப்பகுதியில் அப்பாடசாலையில் அரச நியமனம் பெற்ற முதல் ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1993 இல் களுத்துறை தேசிய விஞ்ஞான கல்வி நிறுவனத்தில் (NIHS) பொது சுகாதார பயிற்சியில் இனைந்து கொண்ட இவர், 1995 ஆம் ஆண்டில் முதல் நியமனத்தைப் பெற்று களுத்துறை தர்க்கா நகரில் பொதுச் சுகாதார பரிசோதகராகக் கடமையை ஆரம்பித்தார்.
ஒரு வருட சேவையின் பின்னர் 1996 ஆம் ஆண்டில் அம்பகமுவை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கினிகத்தேனை, பிட்டவலை போன்ற பிரதேசங்களில் 3 வருடங்கள் கடமையாற்றினார்.
அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டில் மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பொகவந்தலாவை பொதுச் சுகாதார பரிசோதகராக, தொடர்ந்து 15 வருடங்கள் பணியாற்றினார்.
இக்காலப்பகுதியில் நுவரெலியா மாவட்ட மேலதிக சுகாதாரக் கல்வி உத்தியோகத்தராகவும் தனது சேவையை வழங்கியுள்ளார்.
தோட்டப்புறங்களிலுள்ள படித்த பெண்களைத் தெரிவு செய்து பொதுச் சுகாதார தொண்டர்களாகப் பயிற்சி அளித்து, சுமார் 200 தொண்டர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்று கொடுக்க உறுதுணையாக இருந்தார்.
இத் தொண்டர் பயிற்சிக்கு அக்கால நுவரெலியா பிரதேச பணிப்பாளராக கடமையாற்றிய Dr. நிஹால் வீரசூரியவுடன் இனணந்து ஒஸ்திரியா நிறுவனத்தின் உதவியுடன் அக்கால தாய் மரண வீதத்தை குறைப்பதற்குத் தகுந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இரவு பகல் பாராமல் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்.
அதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் மஸ்கெலியா பிரதேசத்தில் கடமைக்கு சென்ற இவர் மஸ்கெலியா பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தினார்.
இவரின் காலகட்டத்தில் மஸ்கெலியா சுகாதார காரியாலயத்தில் உணவு பாதுகாப்பு துறையில் இலங்கையில் மூன்றாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து கொட்டகலை பிரதேசத்தில் கடமையாற்றிய இவர், 2018 ஆம் ஆண்டு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகராக ( SPHI ) பதவி பெற்று மஸ்கெலியா பிரதேசத்தில் கடமையாற்றினார்.
இக்காலகட்டத்தில் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான தேசிய டிப்ளோமா பயிற்சியைப் பெற்றுக் கொடுத்து இவர்களுக்கான NVQ சான்றிதழையும் பெற்றுக் கொடுத்து சுமார் 360 ஆசிரியர்கள் அரசின் உதவி தொகையைப் பெற்று கொள்ள உறுதுணையாக இருந்தார்.
தோட்டப்புற இளைஞர், யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சியை செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் பெற்றுக் கொடுத்து பொதுச் சுகாதார துறையின் விழிப்புணர்வு ஏற்படுத்த பெரும் பங்களிப்பை செய்தார்.
இன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் இவர் இலங்கை சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் நுவரெலியா பிரதேச மனித உரிமை ஆணைக்குழுவின் ஆசிய பிரதேச அமைப்பிற்கான பிரதிநிதியாகவும் சமூகத்துக்கு தன்னாலான சேவையை முழு மனத்துடன் வழங்கி வந்தார். அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
பன்விலை ம. நவநீதன்
