நுவரெலியா பிரதேச செயலாளர் பங்கேபுடன் நேற்று 13 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை ‘பேரழிவு வருமுன் காப்போம்’ செயலமர்வு நுவரெலியா எலப்பையின் விருந்தினர் விடுதி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
செயலமர்வினை மாவட்ட தேசிய சமாதானப் பேரவையின் முகாமையாளர் திருமதி இரேஷா உதேனி,தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் திருமதி ஆயிஷா ஜயவர்தன ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
நுவரெலியா பிரதேச செயலாளர் கே.ஏ.எல்.எஸ்.களுகம்பிட்டிய,நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக – குறிப்பாக சுனாமி, தித்வா புயலின் தாக்கம்,வெள்ளப்பெருக்கு, மண் சரிவு போன்றவற்றில் ஏற்பட்ட உயிர், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
அவ்வாறான நிலையில் இருந்து முன் கூட்டியே நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களையும் அவர்களின் உடமைகளையும் காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அனர்த்தம் வருமுன் முக்கியமான ஆவணங்கள், பெறுமதியான பொருள்கள் அடங்கிய பொதிகளைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.



அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அந்த ஆவணங்கள் அடங்கிய பொதிகளுடன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்த அளவு அனர்த்தம் அற்ற பகுதிக்கு விரைந்து செல்ல வேண்டும்.
அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அந்தப் பகுதிக்குப் பார்வையிடச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.எதிர் காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு, வெள்ளப் பெருக்கு, பூமி தாழ் இறக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்
