நுவரெலியா, அம்பேவலை – பட்டிப்பளை பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டதை, நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட ஐவருக்குத் தலா 45 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
பெல்மதுளை, பலாங்கொடை, நாவலப்பிட்டி, அம்பேவலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், நேற்று (13) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா 45,000 ரூபா வீதம் மொத்தம் 2,25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
அத்துடன், பாதுகாக்கப்பட வேண்டிய வனப்பகுதிக்குச் சேதம் ஏற்படுத்தியமைக்காக 25,000 ரூபா இழப்பீடு செலுத்தவும் நீதவான் உத்தரவிட்டார். இதன்படி, மொத்தமாக 2,50,000 ரூபா செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பல நாள்களாக அந்த வனப்பகுதியில், கொத்மலை ஓயாவுக்கு நீர் செல்லும் எல்ஜின் ஓயாவுக்கு அருகில், பெரிய குழிகளைத் தோண்டி, மாணிக்கக்கல் அடங்கிய படிமங்களை அகழ்ந்தெடுத்துள்ளனர்.
பின்னர் அவற்றை எல்ஜின் ஓயாவில் கழுவியதன் மூலம் சுற்றுச்சூழலுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
