கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (20) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில், சிறையில் உள்ள ஞானசார தேரருக்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஏன் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே ஞானசார தேரருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசாங்கத்தால் புறக்கணிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை முறையாக நிலைநாட்டும் உறுதிப்பாட்டுடனேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி அரசாங்கத்தால் செயற்பட முடியாது எனவும் வலியுறுத்தினார்.
ஒருவரின் அந்தஸ்து, பதவி அல்லது அதிகாரம் எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திற்கு வாக்களிக்காதவர்கள்கூட, தனிநபர்களின் செல்வாக்கு அல்லது அந்தஸ்தின் அடிப்படையில் விதிவிலக்குகள் வழங்கப்படாமல் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, தற்போதைய அரசாங்கம் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் அமைவாகவே செயற்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
