பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு காங்கிரஸ் மாராட்டு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”ஏழை பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிழைப்பிற்காக கூலி வேலைக்கு அனுப்பி வந்தனர். இதை தடுப்பதற்காக மதிய உணவு திட்டத்தை 1956-57 ஆம் கல்வியாண்டில் முதலமைச்சர் காமராஜர் அறிமுகப்படுத்தினார்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் காமராஜர் பேசும் போது, ‘கடையர் எப்படி கரை தேர முடியும், கல்வி பெற்றால் தான் தேருவார்கள். படிக்கிற கல்வியால் அறிவும், திறமையும் வளர்ந்தால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள், மனிதர்களாக மாறுவார்கள்.
ஆனால், பெரும்பாலானோருக்கு எழுத்தறிவே கிடையாது. ஊரில் பள்ளிக்கூடமே இல்லாத போது, எப்படி எழுத்தறிவு வரும் ? நாட்டில் நமது முதல் வேலை எல்லா ஊர்களுக்கும் பள்ளிக்கூடம் கட்டுவதாகும். அனைவரும் படிக்கும்படி கல்வியை இலவசமாக்க வேண்டும்.
நிலம் ஈரமாக இருந்தால் பயிரிடலாம். காய்ந்து கிடந்தால் எதை பயிரிடுவது ? குழந்தைகள் வயிறு காய்ந்திருக்கையில், பாடம் சொல்லிக் கொடுத்தால் ஏறுமா?
எனவே, பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதன் மூலம் கல்வியில் புரட்சி செய்யலாம்.
இந்த திட்டம் வெற்றி பெற மத்த எல்லா வேலையையும் ஒதுக்கி விட்டு, ஊர் ஊராகப் போய் மதிய உணவுத் திட்டத்திற்கு பிச்சை எடுக்கவும் சித்தமாக உள்ளேன்’ என்றார்.
