மஸ்கெலியா கார்ட்மோர் தனியார் தோட்டத்தின் கல்கந்தை பிரிவில் நேற்று (20) ஏற்பட்ட மண்சரிவையடுத்து, ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அதே தோட்டத்தில் உள்ள மருத்துவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தற்காலிகமாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கார்ட்மோர் கிராம அலுவலர் திருமதி பிரதீபா தெரிவித்தார்.
கனமழை காரணமாக நேற்று 20 ஆம் தேதியன்று காலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், சரிவான பகுதியில் வசிக்கும் 6 குடும்பத்தைச் சேர்ந்த 24 பேரின் உயிருக்குக் கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் இந்த செங்குத்தான சரிவை கொண்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, சுரங்கங்கள் மற்றும் புவியியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், சரிவான பகுதியில் அமைந்துள்ள 24 தோட்ட வீடுகளைச் சேர்ந்த 208 குடும்ப உறுப்பினர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
நேற்று 20 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, சரிவில் வசிக்கும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதே தோட்டத்தில் உள்ள மருத்துவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர் என்று கார்ட்மோர் கிராம அலுவலர் திருமதி பிரதீபா தெரிவித்தார்.
திருமதி பிரதீபா மேலும் கூறுகையில், இந்த நிலச்சரிவு குறித்து நோர்வூட் கோட்டச் செயலகம் மூலம் பேரிடர் மேலாண்மைப் பிரிவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இது தொடர்பாக, பாதிக்கப்படக்கூடிய பகுதியில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள், எதிர்காலத்தில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு முன்பாக, அவர்களும் அவர்களது குழந்தைகளும் உடனடியாக மீள்குடியேறுவதற்கு ஏற்ற இடத்தில் வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நேரம் வரை பாதிக்கப்பட்ட இடத்திற்கு எந்த ஒரு அரசாங்க அதிகாரிகள் சென்று பார்வை இட வில்லை என்றும் தனியார் தோட்ட முகாமையாளர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதிக்குச் செல்லும் பிரதான சாலையில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்துக்குத் தடை ஏற்பட்டு உள்ளது. அதனைச் சீர் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் அப்பிரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்.
தோட்ட முகாமையாளர் தொழிலாளர்களைப் பணிக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என அப் பிரிவில் உள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அப் பிரதேசம் பாரிய அனர்த்த பிரதேசமாக உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா விசேட நிருபர்
