நோர்வூட்டில் சட்ட விரோத மாணிக்கக் கல் அகழ்விடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
நோர்வுட்டில் தீவிரமாக இடம்பெற்ற இரத்தினக்கல் அகழ்வை பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்தபோதிலும் சந்தேக நபர்களைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
எனினும், 6 நீர் மோட்டார்கள் உள்ளிட்ட பல உபகரணங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் நீர்வழியுடன் தொடர்புடைய நோர்வுட் ஃபோர்ட்ரீ தோட்டப் பகுதியில் உள்ள ஓடையை மறித்து, பாரிய அளவில் சட்டவிரோதமாக இரத்தினக்கற்கள் அகழும் இடமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். நீர்வரத்தைச் சீர்படுத்தும் பணியைப் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
பொலிஸார் சோதனை நடத்திய போது, அங்கிருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக சக்திவாய்ந்த 6 நீர் மோட்டார்கள், இரத்தினக்கற்கள் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த நீர்த்தடுப்புகளையும் அகற்றி, நீரோட்டத்தை வழமைக்குக் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓடையை மறித்து, பெரிய குழிகளைத் தோண்டி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வினால் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கௌசல்யா
