மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் வருடாந்த கிரிக்கட் போட்டி நாளை மறுதினம் (20) நடைபெறுகிறது.
மலையக மாணவர் சமூகத்தின் கல்வி மேம்பாடு மற்றும் மலையகப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி மற்றும் பாடசாலை வளங்களின் அபிவிருத்திக்கு நிதி திரட்டும் முகமாக, மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆண்டுதோறும் ‘ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் போட்டி தொடரை’ நடாத்தி வருகிறது.
அந்த வகையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்துவதற்கு மன்றம் திட்டமிட்டுள்ளதாக அதன் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஜி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது.
சர்வதேச மைதானத்தில் களமிறங்கும் இளைஞர்கள்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்துக்கு நிதி பங்களிப்பு செய்துவரும் இளைஞர்களின் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கும், அவர்களைச் சர்வதேச மைதானம் ஒன்றில் களமிறங்கச் செய்வதற்கும் இந்தப் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இச்சுற்றுப் போட்டியானது ஐ.சி.சி. (ICC) விதிகளுக்கு அமைய நடைபெறும்
40 அணிகளின் பலப்பரீட்சை
மன்றத்தின் அங்கத்துவம் பெற்றவர்களை மாத்திரமே உள்ளடக்கியவாறு, அணிக்கு 11 பேர் கொண்ட மொத்தமாக 40 அணிகள் இதில் பங்குபற்றவுள்ளன.
இந்தப் போட்டியின் ஊடாகக் கிடைக்கப்பெறும் நிதியானது மலையக மாணவர்களின் கல்வி மற்றும் பாடசாலை வள அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என்றார்.
ஶ்ரீனிவாசகம் இரவீந்திரன்
