மன்னாரில் இருந்து தனது கணவருடன் மட்டக்களப்பிற்குச் சென்ற தன் மகளையும், 10 மாதங்கள் நிரம்பிய பேரப் பிள்ளையையும் காணவில்லை எனத் தெரிவித்து, அப்பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (08) முறைப்பாடு செய்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தைச் சேர்ந்த றெனோயன் றெயாழினி (வயது 18) அவரின் 10 மாதக் குழந்தையுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, படத்தில் உள்ள தாயையும் குழந்தையையும் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 077-5841705, 077-6902536 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு அத்தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
“எனது மகளின் கணவர், தன் தாய்க்குச் சுகவீனம் எனக் கூறி கடந்த 2ஆம் திகதி (02.05.2026) தனது சொந்த இடமான மட்டக்களப்பிற்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். மன்னாரில் இருந்து என் மகளையும், பேரப் பிள்ளையையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார்.
மன்னாரில் இருந்து வவுனியா சென்று, அங்கிருந்து மட்டக்களப்பிற்குச் செல்வதாக அவர் கூறிச் சென்றார். இந்த நிலையில், தற்போது என் மகளும் பேரப் பிள்ளையும் காணாமல் போயுள்ளனர்.
என் மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ள போதிலும், என் மகளும் பிள்ளையும் அங்கு செல்லவில்லை” எனப் பாதிக்கப்பட்ட தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் மருமகன் மட்டக்களப்பில் உள்ள அவரது தாயார் வீட்டில் இருப்பதாகவும், தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவிப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, படத்தில் உள்ள தாய்,குழந்தை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 077-5841705, 077-6902536 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு அத்தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கெசளல்யா
