குத்துச்சண்டை போட்டியில் சாதனைமேல் சாதனை நிகழ்த்தும் கேம்பிரிட்ஜ் கல்லூரி!
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜயா, அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி சார்பாக 02 மாணவிகள் பங்குபற்றினர்.
அவர்களில் தரம் 10 (பி)இல் கல்வி பயிலும் மாணவி செல்வி கி. லதூர்ஷியா, இறுதிப்போட்டி வரை விளையாடி, வெள்ளிப்பதக்கத்தைச் சுவீகரித்து பாடசாலைக்கும் தன் பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ளார்.


இந்த வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அதிபர்,பாடசாலை நிர்வாகக் குழுவினர்,பகுதி தலைவர்கள், பாட ஆசிரியர்கள், மாணவிகளுக்கான குத்துச்சண்டை பயிற்சியை வழங்கிய ஆசிரியர் செ. செபஸ்டியன் ஆகியோர் பாராட்டப்படுகின்றனர்.
மாணவி லதுர்ஷியா, ஆசிரியர்களான கிருஸ்ணகுமார்,இந்திரா ஆகியோரின் புதல்வியாவார்.
கடந்த செப்டம்பர் (2026) 09ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கண்டி-பிலிமத்தலாவ தீரானந்த தேசிய பாடசாலையில் போட்டி நடைபெற்றது.
அத்தோடு வரும் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழா (ALL ISLAND SCHOOL GAMES FESTIVAL- Boxing Championship) போட்டியில் மாணவி கி.லதூர்ஸியா இந்த வெற்றி மூலம் பங்குபற்றுவதற்கான தகுதியை பெற்றுள்ளார்.
ஏற்கனவே நடந்து முடிந்த டி.டி. முனசிங்க மற்றும் மத்திய மாகாண போட்டிகளில் பங்குபற்றி முறையே வெண்கல, வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்த கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 09இல் கல்வி பயிலும் மாணவி யு.தன்யசிறியும் பங்குபற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
