ஹற்றன் பஸ் நிலைய பொது கழிவறையால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, அந்த இடத்தில் இன்று (20) விசேட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஹற்றன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன, கினிகத்தேனை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் பந்துல ஹேரத், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், நகர சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
கழிவறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் இன்று உறுதியளித்தனர்.


மழை பெய்யும் காலங்களில் மலசலகூடக் குழிகள் நிரம்பி வழிவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதுடன், வீடுகளில் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும் இடையூறு ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன, பேருந்து நிலைய வளாகத்தில் இரண்டு பொதுமலசலகூடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் பயன்பாட்டில் உள்ள மற்றைய மலசலகூடத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இந்தப் பிரச்சினைக்குக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்குக் குரிய விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, அப்பகுதியில் நிலவும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து முறையான ஆய்வை மேற்கொண்டு, விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கினிகத்தேனை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் பந்துல ஹேரத், அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா நிருபர்
