புசல்லாவை தோட்டங்களில் அரவம் தீண்டிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புசல்லாவை, கலுகல்லை, சங்குவாரி மேற்பிரிவு ஆகிய தோட்டங்களில் பணிபுரிந்துகொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இருவர் இன்று (17) பாம்புக்கடிக்கு இலக்காகியுள்னர்
பாதிப்புக்குள்ளான கலுகல்லை தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய தொழிலாளியும் சங்குவாரியைச் சேர்ந்த செல்லமுத்து சுப்பிரமணியம் என்ற 55 வயது தொழிலாளியும் உடனடியாக வகுவப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகக் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலுகல்ல தோட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னரும் பாம்புக்கடிக்கு இலக்கான பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
பணியின்போது இவ்வாறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பவர்களுக்குத் தொழிலாளர் நட்டஈடு (Workmen’s Compensation) வழங்கப்பட வேண்டும்.
அஃது இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டப் பகுதிகள் காடடர்ந்து காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிப்பதற்குத் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, தோட்டங்களைக் காடாக்க விடாமல் முறையாக பராமரிக்குமாறும் தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கௌசல்யா
