125 ஆண்டுகால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் நுவரெலியா குட் ஷெப்பர்ட் மகளிர் கல்லூரி – விளையாட்டு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
நுவரெலியா குட் ஷெப்பர்ட் மகளிர் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி, அக்கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள விளையாட்டு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று (19) நடைபெற்றது.
கல்லூரியின் கல்வி,விளையாட்டுத் துறைகளின் எதிர்கால வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக, பெற்றோரின் நிதிப் பங்களிப்பின் மூலம் 80 இலட்சம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. விளையாட்டு மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை ஒரு வருடத்திற்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேகர, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனோஜ் ஹேரத், கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பாளர் அருட்தந்தை கமிலஸ் சான்ஸ், கல்லூரி அதிபர் அருட்சகோதரி மேரி ஷாமலி பெர்னாண்டோ உள்ளிட்ட அழைக்கப்பட்ட விருந்தினர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
125 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட நுவரெலியா குட் ஷெப்பர்ட் மகளிர் கல்லூரி, அப்பகுதியில் பெண் கல்வியின் வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் கல்வி நிறுவனமாகும்.
இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் விளையாட்டு மண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது, மாணவிகளின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர். எப். எம். சுஹெல் – நுவரெலியா நிருபர்
