நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
கடந்த மூன்று நாள்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் பெருந்தோட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. மேலும் பண்ணையாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.
அத்துடன் நேற்று முன்தினம் (19) இரவு முழுவதும் பெய்த கனமழையால் காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாமி மலை ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, மரே ஓயா, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை,அப் பகுதியில் உள்ள அனைத்து நீர் ஓடைகளுடன் காட்மோர் நீர் வீழ்ச்சி, மோகினி நீர் வீழ்ச்சி, மரே நீர் வீழ்ச்சி, லக்சபான,டெவோன் நீர் வீழ்ச்சி ஆகியவற்றில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மகாவலி கங்கை களனி கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதேபோல் மலையக பகுதியில் உள்ள அனைத்து காட்டாறுகளை அண்டிய பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் திட்டுகள் நிறைந்து காணப்படும் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் தொடர்ந்து கன மழை பெய்யும் பட்சத்தில் கொன்யோன், லக்சபான, பொல்பிட்டி, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை, புரோட்லேண்ட் நீர் மின் நிலையம் பகுதியில் உள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் நிலை ஏற்படும்.
மஸ்கெலியா நிருபர்
