மிஸ்ட் கோல் வந்தால் தேடாதீர்கள் என்று கொத்து பாஸ் என்கின்ற வாசகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்படும் தொடர்புகள் அதள பாதாளத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதை அன்றாடம் செய்திகளில் பார்த்து வருகிறோம்.
அப்படி அநேகமாக ஏற்படும் தொடர்புகள் ‘மிஸ்ட் கோல்’ மூலமாக ஏற்பட்டவை என்பதும் நமக்குத் தெரியும்.
அப்படியிருந்தும் நாளாந்தம் நூற்றுக் கணக்கான அழைப்புகள் எமது இலக்கத்திற்கு வருகின்றன.
நீங்கள் கோல் எடுத்தீங்களா? உங்கள் பேர் என்னா? எங்கிருந்து பேசுறீங்கள்? இப்படி அநேக கேள்விகள்.
சில வேளைகளில் யுவதிகளிடமிருந்து வீடியோ கோல்கள்கூட முயற்சிக்கப்படுகின்றன. அனைத்தும் தோட்டப் புறங்களில் இருந்து வரும் அழைப்புகள்தான்.
அவர்களின் பெயர்களைப் பார்த்தால், கொத்து பாஸ், பேக்கரி பொடியன், தங்கம்,பேபி இப்படி பல. அவர்களுக்கு அறிவுரை சொல்லியே நேரம் வீணாகிறது.
அண்மையில் ஒரு பெரியவர் எடுத்தார்.
“ஹலோ யார் பேசுறீங்க?”
“சொல்லுங்கள் ஐயா!”
“இல்ல இந்த நம்பருக்கு மிஸ்ட் கோல் வந்திருந்தது…அதான்”
“மிஸ்ட் கோல் எடுத்தவர் பேர் இருந்ததா ஐயா?”
“இல்லைங்க..அதான் கேட்க எடுத்தேன்”
“தெரியாத நம்பர் வந்தால் நீங்கள் ஏனய்யா தேடப் போறீங்க? மிஸ்ட் கோல் வந்தால் தேடாதீர்கள். பேசாமல் வேலையைப் பாருங்கள். எடுத்தவனுக்குத் தேவையிருந்தால் திரும்ப எடுப்பான்தானே! நீங்கள் ஏன் கோல் எடுத்து யார், எவர் என்று தேடப் போறீங்க. சில பொம்பிளைப் பிள்ளைகளும் கோல் எடுத்து இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள்”
“அதுதான் பாருங்கள், அம்மா, அப்பா போன் வாங்கிக் குடுத்திடுறாங்க. இதுக வீட்டிலை உட்கார்ந்துகிட்டு மிஸ்ட் கோல் தேடுதுங்க. மூளை கெட்ட ஜென்மங்கள். உங்கள் அறிவுரைக்கு நன்றிங்க. எனக்கு 70 வயது ஆகுது. என் மகள் வெளியூரில் இருக்கு. அதான் எனக்குச் சரியா போன் பார்க்கத் தெரியாது. மன்னிச்சிடுங்க”
என்று நன்றியுடன் போனைக் கட் பண்ணினார் பெரியவர். அவர் நிலைமை ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இந்த நவீன வர்த்தகமய உலகத்தில் ‘மிஸ்ட் கோல்’கூட ஓர் உபாயந்தான்.
இதையும் வாசிக்கலாம்: கல்வி மேற்பார்வை கண்துடைப்பு: ஒளியும் மறுபக்கம்
மலையகத்தின் தோட்டப் புறங்களில் உள்ள கொத்து பாஸ், ரொட்டி பாஸ், பேக்கரி இளையோர் வாழ்க்கையில் மிஸ்ட் ஆகுவது இப்படி மிஸ்ட் கோல் தேடப்போய்த்தான் என்கிறார் நண்பர் ஒருவர்.
மிஸ்ட் கோல் வந்ததும் அதை எப்படியாவது அறிந்துவிட வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள்.
உங்களுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை? மிஸட்கோல் வந்தால் விட்விட்டு வேலையைப் பாருங்கள். எடுத்தவன் தனக்குத் தேவை என்றால், அவன் திரும்ப எடுப்பான்தானே! நீங்கள் ஏன்…றோட்டில் போகும்……..? பிறகு கடிக்குது கடிக்குது என்பான்.
எனவே, உங்கள் போன் நம்பரில் இல்லாத ஓர் இலக்கத்திலிருந்து மிஸ்ட் கோல் வந்தால்…கணக்கு எடுக்காதீர்கள் மலையக இளையோரே என்பதுதான் எமது வேண்டுகோள்.
இப்படிக்கு ‘கொத்து பாஸ்’
