ரஷியா முழுவதும் ஒரே நேரத்தில் 1,000 டிரோன்களை ஏவி மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை உக்ரைன் இன்று நடத்தியுள்ளது.
உக்ரைன் – அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ரஷியா மீதான இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ரஷியாவின் எரிவாயு நிலைகள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், இன்று 1,000-க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷியா மீது ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள எண்ணெய் முனையம் ஒன்றின்மீது நடத்திய தாக்குதலால் அந்தப் பகுதி முழுவதும் தீப்பிடித்தது. அதேபோல, மற்றொரு எண்ணெய் கிடங்கிலும் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ஒருவர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷியாவின் 15 பிராந்தியங்களில் உக்ரைனால் ஏவப்பட்ட 1,015 டிரோன்களை தாக்கி அழித்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதல்களில் ஒரு பெண் பலியானதாகவும், 6 வயது சிறுமி உள்பட இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து, கல்வி நிறுவனம் ஒன்று சேதமடைந்து, பல வாகனங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
