மலையகத்தில் தொடர் மழை பெய்வதால் மண்சரிவு அபாயம் நிலவுகிறது. அத்துடன் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இன்று 22 ஆம் திகதி காலை 8 மணி வரை உள்ள காலப்பகுதியில் மவுசாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 4.7 அடி நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.
அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 4.4 அடி நிறைய வேண்டிய நிலையில் உள்ளது. கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 5.8 அடி நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர் ஓடைகள் ஆறுகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான காட்மோர் தோட்ட கல்கந்தை பிரிவில் நேற்று முன்தினம் காலை வேளையில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.


இதனால் அங்கு குடியிருந்த ஆறு குடியிருப்புகளில் இருந்த 30 குடியிருப்பாளர்கள் அந்த தோட்டத்தில் உள்ள மருந்தக பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சகல வசதிகளும் அப் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மேற் கொண்டு வருகின்றார்.
கடந்த 2017 ம் ஆண்டு காலப்பகுதியில் அப் பகுதியில் பாரிய அளவிலான வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளதால் அக் காலகட்டத்தில் அங்கு இருந்த 42 குடும்பங்களைச் சேர்ந்த 208 பேர் தற்காலிகமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர் அதன் பிறகு அவர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று தொலைவில் தற்காலிக கொட்டில்கள் தகடுகளை கொண்டு அமைக்கப்பட்ட போதும் தொழிலாளர்கள் அந்த கொட்டில் களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
காரணம் போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு சற்று தொலைவில் அமைக்க பட்டதால் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.
வருடங்கள் 6 கடந்தன அபாய எச்சரிக்கையுடன் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டு உள்ள பகுதியில் இன்னும் பல குடும்பங்கள் தங்கிய நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எந் நேரத்திலும் அப் பகுதியில் பூமி தாழ் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகம் மற்றும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
